விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும்! - செல்வம் அடைக்கலநாதன்
விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அழிவுகளுக்கும் முகங்கொடுத்து வருகின்ற நிலையில் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்
. மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
விவசாயிகள் அனைவரும் இரவு, பகல் பாராமல் தூக்கத்தைத் தொலைத்து கடன் பட்டு நகைகளை அடகு வைத்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவர்களிடன் உரமானியத்தை காரணம் காட்டி குறிப்பிட்ட அளவு நெல் கொள்வனவு செய்வது விவசாயிகளை மீண்டும் ஏழ்மை நிலைக்குத் தள்ளி விடும் செயற்பாடாகும்.
விவசாயிகளின் நலனில் அக்கறை இருந்தால் உரமானியத்தை காரணம் காட்டி அவர்களிடமிருந்து நெல் கொள்வனவு செய்வது தற்போது கைவிடப்பட வேண்டும்.
ஏனெனில் விவசாய பயிர்ச் செய்கையின் ஆரம்பக் காலங்களில் பெய்த மழை காரணமாக அதிகளவில் அழிவுகளும், இழப்புக்களும் விவசாய செய்கைக்கு ஏற்பட்டுள்ளது.
எதிர்பார்த்த அளவில் விளைச்சலும் இல்லை. நெல் சந்தைப்படுத்தல் சபை கேட்பது போல் காய வைக்கும் அளவிற்குத் தள வசதிகள் இல்லை. அதிகளவான விவசாயிகள் வீதி ஓரங்களிலே நெல்லை காய வைக்கும் நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.
அத்துடன் அதிகளவான நெல்லை பாதுகாத்து வைக்கும் களஞ்சியங்கள் இல்லை. மேலும் விவசாயிகள் நெல் வைக்கப்பட்ட இடத்திலிருந்து நெல் கொடுக்கப்படும் இடங்கள் வெகு தூரத்தில் உள்ளது. இதனால் போக்குவரத்துச் செலவு இரட்டிப்பாகின்றது.
இதேநேரம் தனியார் அறுவடை செய்யும் வயல் அருகில் வந்து பச்சையாக நெல் கொள்வனவு செய்வதால் விவசாயிகளின் சுமை ஓரளவிற்கேனும் குறைக்கப்படுவதாகப் பெருமளவிலான விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.
எனவே விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தபின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாகவிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



