மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதிருப்தி
முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தமானது நாங்கள் எதிர்பார்த்த விதத்தில் இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆணையாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அதனை தற்போது மதிப்பீடு செய்து வருகிறோம், விரிவாக ஆராய்ந்த பிறகு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள் அறிக்கை வெளியிடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 1 ஆம் திகதிக்கான மின்சார கட்டண திருத்தத்திற்கான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுக்கு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
20% மின்சாரக் கட்டண குறைப்பு
இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள மின்சார கட்டண திருத்தமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்பார்த்தவாறாக அமையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மின்தேவை, அந்நியச் செலாவணி விலைகள் மற்றும் எரிபொருள் விலைகள் போன்றவற்றின் அண்மைக் காலக் குறைப்புக்களைக் கருத்தில் கொண்டு மின்சார நுகர்வோர்கள் அண்ணளவாக 20% மின்சாரக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று ஜனக ரத்நாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
மின்சார பாவனை குறைப்பு மற்றும் மின்சார உற்பத்தி செலவுகள் தொடர்பில் தாம் முன்வைத்த தரவுகளின் அடிப்படையில் இலங்கை மின்சார சபை முன்வைக்கும் மின் கட்டண திருத்தம் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |