வவுனியாவில் மதுபான விற்பனை நிலையத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
வவுனியா தொடருந்து நிலைய வீதியில் தற்போது அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை, அதே வீதியில் குட்செட் வீதி சந்திப் பகுதியில் மாற்றுவதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதி பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு இடமாக உள்ளதுடன் வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும் முக்கிய பகுதியாக காணப்படுவதனாலேயே அவர்கள் இந்த மாற்றுத் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் எதிர்ப்பு
எனவே, அங்கு மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் அதிகமான பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, குறித்த இடத்தில் மதுபான விற்பனை நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கையை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14