பயங்கரவாத தடைச் சட்டம் எப்போது நீக்கப்படும் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு!
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள சர்ச்சைக்கிரிய 'பயங்கரவாத தடைச் சட்டம்' முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த முக்கிய விபரங்களை வெளியிட்டார்.
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதற்கான பணிகள் அதன் இறுதிப் படியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்று, புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த புதிய சட்டத்தின் மூலம் 'பயங்கரவாதச் செயல்' என்றால் என்ன என்பது துல்லியமாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கிளிநொச்சி பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் தவறான தகவல் அடிப்படையிலானவை என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பாடகர் மேடையில் பாடல் பாடியதற்காகவோ அல்லது தனது கலை உணர்வுகளை வெளிப்படுத்தியதற்காகவோ கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சட்டம் அமலாக்கப்படுவதில் எந்தவொரு இனப் பாகுபாடும் இல்லை எனவும், பேச்சுச் சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வட பகுதிக்கும் சரி, தெற்கு பகுதிக்கும் சரி ஒரே சட்டம்தான் அமல்படுத்தப்படுகிறது. ஒருவர் தமிழர் அல்லது முஸ்லிம் என்பதற்காகச் சட்டம் மாறுபடப் போவதில்லை அதேபோல ஒருவர் சிங்களவர் என்பதற்காகச் சட்டம் கூடுதலாகப் பாயப் போவதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம் இன்னும் நாட்டில் நடைமுறையிலுள்ளதால், அதன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதில் உள்ள குறைபாடுகள் மற்றும் தவறுகள் அனைத்தையும் நீக்கி, மிக விரைவில் புதிய சட்டம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.