வடக்கு கிழக்கில் சர்வதேச நீதியை கோரி போராட்டத்தில் ஒன்றிணைந்த மக்கள் (Video)
வடக்கு கிழக்கில் இலங்கையின் போர் குற்றங்களை விசாரணை செய்ய வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை
திருகோணமலையில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய
ஜனநாயகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று (21.09.2023) பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது "போர் குற்றங்கள் செய்தவர்களை நீதிக்கு முன் நிறுத்து, பாலியல் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும், 74 வருட இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும், வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும்," போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனு கையளிப்பு
மேலும் இந்த போராட்டத்தின் இறுதியில் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் இது தொடர்பில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜனநாயக மக்கள் போராட்டம் வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் இன்று இடம்பெற்ற நிலையில் திருகோணமலையிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கிளிநொச்சி கொக்கிளாய் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (21-09-2023) கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எத்தனை ஆணைக் குழுக்களை நியமித்தாலும் போலியான ஆணைக்குழுகளாகவே செயற்பட்டு வருகின்றன என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமை சங்கம் மற்றும் பெண்கள் வலை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
செய்தி-யது
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இலங்கையின் போர் குற்றங்களை விசாரணை செய்ய வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்ட வினோநோகராதலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
இன்று சர்வதேச சமாதான தினம் இந்த தினத்தில் இன்று போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றோம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியான விசாரணை வேண்டும்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது சர்வதேச நியமங்களின் பிரகாரம் அகழப்படவேண்டும் போர்க்குற்றவாளிகள் இனம் காணப்பட்டு அவர்கள் சர்வதேச பொறிமுறையின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் நாட்டில் சமாதானம் அமைதி என்பது எட்டாத கிட்டதா ஒன்றாக இருக்கின்றது இங்கே ஆட்சிசெய்கின்றவர்களுக்கு சமாதானம் என்பது தேவையில்லாத விடையமாக இருக்கின்றது ஆட்சிபீடம் ஏறுகின்றவர்கள் இனவாத கருத்துக்களை முன்னிறுத்தி பௌத்த மேலதிக்க சிந்தனையுடன் பெரும்பான்மை பேரினவாத சக்திகளின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏற துடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
சிறுபான்மை மக்களுக்கு தமிழ்மக்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வினை இனப்பிரச்சினைக்கான தீர்ப்பதற்கான எந்த வளிமுறையினையும் பொறிமுறையினையும் தேடாமல் குறிப்பாக தொடர்ச்சியாக அரசியல் செய்வதற்காக நாட்டை ஆழுவதற்காகத்தான் சமாதன முயற்சிகளில் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என 100 வரையானவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
செய்தி- கீதன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் இலங்கையில் செய்த போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுனையை உறுதிசெய்யுமாறு கோரி காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
சமூக செயற்பாட்டார்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களின் இன அடையாளங்களை அழிக்காதே, பேர்குற்றங்கள் செய்தவரை நீதியின் முன் நிறுத்து. வெள்ளைவான் ககடத்தல் காரரை நீதியின் முன் நிறுத்து என சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடாந்து ஜ.நாவிற்கான அறிக்கை ஒன்றை மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையளித்த பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
செய்தி-பவன்
மன்னார்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறிதல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதுடன், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி- ஆஷிக்
யாழ்ப்பாணம்
இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறை வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று யாழில் நடாத்தப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐஓஎம் அலுவலகம் முன்பாக இன்று இப்போராட்டம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
செய்தி-தீபன்



