யாழில் பாரிய போராட்டம்! கலகமடக்கும் பொலிஸார் களத்தில்
யாழ்ப்பாணத்தில் இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை கண்டித்து போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
யாழ்.மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
போராட்ட பேரணி
தீபக மீனவ அமைப்புகள் சேர்ந்து முன்னெடுத்துவரும் குறித்த போராட்டத்தின் போது, யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்தில் மனுவொன்றை கையளித்துவிட்டு இந்திய துணை தூதரகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.
"தாண்டாத தாண்டாத எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பிய நிலை கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொலிஸ் பாதுகாப்பு
போராட்ட பேரணி இந்திய துணை தூதரகத்தை அடைந்த நிலையில், அங்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்திலிருந்து ஐவரை மட்டும் உள்ளே அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
போராட்டக் களத்தில் கண்ணீர் புகை குண்டுகளுடன் கலகமடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




