மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை பாதையில் வழிமறித்த மக்கள்!வெளியான காரணம்(Video)
மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை அம்பிளாந்துறை பிரதான வீதியை புனரமைக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று(20.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராஜா, முன்னாள் மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் புஸ்பலிங்கம் மற்றும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சரை வழிமறித்து போராட்டம்
இதன்போது அபிவிருத்திக்குழு கூட்டத்திற்காக பிரதேச செயலகத்திற்கு, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வருகைதந்த நிலையில் அவரை வழிமறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்டகாலமாக குறித்த வீதியை புனரமைக்க நடவடிக்கையெடுக்கப்படாமையினால் அந்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் புனரமைப்பதற்கான உறுதியளிப்பு
இதனையடுத்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர் உலக வங்கியின் உதவியுடன் வீதியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குறித்த வீதி புனரமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை அம்பிளாந்துறை-குருக்கள்மடம் இயந்திரப் படகு பாதையூடாக பயணிப்பவர்களிடம் பணம் அறவிடுவது நிறுத்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளும் விடுக்கப்பட்ட நிலையில் அவை தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









