தேர்தல் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் : கால அவகாசத்தை நீடிக்கும் ஜனாதிபதி
தேர்தல் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அமைக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழு, நல்லாட்சி,பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் உட்பட தற்போதைய சமூகத் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தேவையான ஏற்பாடுகள்
பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும் நாள் வரையிலான கால அவகாசத்தைக் குறைப்பது உள்ளிட்ட பல விடயங்களில் பரிந்துரைகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பதில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்களிக்கவும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் அந்த ஆணைக்குழு பரிந்துரைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் மேலும் 02 மாதங்களுக்கு அதன் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |