இலங்கையில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அச்சு ஊடகங்கள்
அச்சுக் கடதாசி தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணிகளால் இலங்கையின் அச்சு ஊடகங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைக்கு டொலர் நெருக்கடி காரணமாக அச்சுக் கடதாசிகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கறுப்புச் சந்தையில் கடதாசி
பெரும்பாலான அச்சு ஊடக நிறுவனங்கள் இதன் காரணமாக கறுப்புச் சந்தையில் கடதாசி உருளைகளை கொள்வனவு செய்தே பத்திரிகை அச்சிடும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றன.
அதே போன்று எரிபொருள் விலை உயர்வின் காரணமாக விநியோக செலவுகளும் அதிகரித்துள்ளது.
செய்திப் பத்திரிகைகள் அச்சிடும் பணிகள் இடைநிறுத்தம்
இவ்வாறான பின்புலத்தில் தற்போதைக்கு இலங்கையின் அச்சு ஊடக நிறுவனங்களில் பல செய்திப் பத்திரிகைகள் அச்சிடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை காலமும் நகரப் பதிப்பு, பிராந்தியப் பதிப்புகள் என்று பல்வேறு பதிப்புகளை வெளியிட்டு வந்த அச்சு ஊடகங்கள் தற்போதைக்கு ஒரே பதிப்பையே மொத்தமாக விநியோகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பத்திரிகை விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் மாத்திரமே விற்பனைக்காக நம்பியிருக்க வேண்டிய நிலையும் அச்சு ஊடக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
லேக் ஹவுஸ்
அரசாங்கப் பத்திரிகையான லேக் ஹவுஸ் நிறுவனத்தில் மாத்திரம் தற்போதைக்கு இன்னும் ஐந்து மாதங்களுக்கான அச்சுக் கடதாசி கையிருப்பில் இருப்பதாகவும், அதன் பின்னர் லேக் ஹவுஸ் நிறுவனப் பதிப்புகளும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இனி வரும் காலங்களில் அச்சு ஊடக நிறுவனங்களை நடத்திச் செல்வதில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.