துறைமுக நகர சட்டமூலத்தை கையில் எடுக்கும் பிரதமர்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார வலயம் தொடர்பான விசேட ஆணைக்குழு சட்டமூலம் சம்பந்தமாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
புத்தாண்டு காரணமாகக் கொழும்புக்கு வெளியில் இருக்கும் பிரதமர், கொழும்பு திரும்பியதும் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதனிடையே பிரதமருக்கும், ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் திங்களன்று நடைபெறவுள்ளது.
இதன் போது துறைமுக நகர விசேட ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் குறித்து தெளிவுபடுத்தப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், திங்களன்று நடைபெறவுள்ளதுடன், அந்த கூட்டத்தில் இது தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட உள்ளது.
