ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் திங்கட்கிழமை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன் போது 21ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுண கட்சியின் ஒரு பிரிவினர் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்கும் மனோநிலையைக் கொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான சிலர் திருத்தச் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளனர். ஏனெனில் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரட்டைப் பிரஜாஉரிமை உள்ளவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது போகும்.
அவ்வாறு நேரும் பட்சத்தில் பொதுஜன பெரமுண கட்சியின் ஸ்தாபகர் பசில் இன் பதவியும் பறிபோகும் என்பதால் அவர்கள் அதனை எதிர்க்கத் தீர்மானித்துள்ளனர்.
அதே நேரம் இன்னும் சில பிரிவினர் திருத்தச் சட்டம் தொடர்பான வாக்களிப்பின் போது புறக்கணிக்கவோ வெளிநடப்புச் செய்யவோ தீர்மானித்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
21வது திருத்தச் சட்டம் காரணமாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டின் காரணமாக மிக விரைவில் பொதுஜன பெரமுண கட்சி இரண்டாக உடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.