ஒரு இந்து எப்படி அமெரிக்காவின் ஜனாதிபதியாக முடியும்! விவேக் ராமசாமி விளக்கம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்து ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகின்றமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி பதிலளித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்டு ட்ரம்ப், மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்து, கட்சியினரிடையே ஆதரவு திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
விவேக் ராமசாமி பதில்
இந்நிலையில் விவேக் ராமசாமி அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பலரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
கேள்வி - அமெரிக்காவை நிறுவியவர்களின் மதம் வேறு. உங்கள் மதம் வேறு. எனவே, நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க முடியாது என்று கூறுபவர்களுக்கு உங்கள் பதில் என்ன?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த விவேக் ராமசாமி, "நான் ஒரு இந்து. நான் என் அடையாளத்தை போலியாக காட்ட மாட்டேன். இந்து மதமும், கிறிஸ்தவமும் பொதுவான ஒரே மதிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.
மத நம்பிக்கை
எனது மத நம்பிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்திற்காக இங்கே இருக்கிறார்கள் என்றும், அந்த காரணத்தை நிறைவேற்றுவது நமது தார்மீகக் கடமை என்றும் நான் நம்புகிறேன். ஏனென்றால் கடவுள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார்.
கடவுள் நம் மூலம் பல்வேறு வழிகளில் செயல்பட்டாலும், நாம் அனைவரும் சமம். இந்த நாட்டில் கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு நான் சிறந்த ஜனாதிபதியாக இருப்பேனா? என்றால் இல்லை, அதற்கு நான் சரியான தேர்வாக இருக்க மாட்டேன். ஆனால் எந்த மதிப்புகளின் மீது அமெரிக்க நாடு நிறுவப்பட்டதோ, அவற்றின் பக்கம் நான் நிற்பேன்" என்றும் தெரிவித்துள்ளார்.