அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வாகும்: - க.வி.விக்னேஸ்வரன்
இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசம். வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம். பராதீனப்படுத்தாத சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவை ஏற்றுக் கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்த பட்ச சமஷ்டி அதிகார கட்டமைப்பு ஒன்றின் கீழ் ஏற்படுத்தப்படும் அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் (C.V. Wigneswaran) தெரிவித்துள்ளார்.
இன்று (02) நடைபெற்ற பல கட்சிக் கூட்டத்திற்கு க.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆவணத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமஷ்டி கட்டமைப்பின் கீழ் இத்தகைய ஒரு நிலையான தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா எல்லாவிதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அதே வேளை, குறுகிய அரசியல் இலாபம், தூர நோக்கற்ற சிந்தனை மற்றும் கடும் பௌத்த இனவாத சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள ஆபத்துக்களைக் கவனத்தில் கொண்டும், வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கும், அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தை அதன் ஆரம்ப நிலையிலிருந்தவாறு முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா காலதாமதம் எதுவும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் கலாச்சார அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் தார்மீக ரீதியான கடமையினையும் பொறுப்பினையும் நாம் வலியுறுத்துவதுடன், அதன் அடிப்படையில் உடனடியாக தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் பேசும் மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தற்போதைய நிலைமையில் மலையக மக்களும், முஸ்லீம் மக்களும் வாழும் இடங்களில் மாகாணசபைகளை உடனே ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri