தமிழ் மக்களிடத்தில் அதிகரித்துள்ள அரசியல் கட்சிகள்! இந்திய துணை ஜனாதிபதி சொல்லிச் சென்ற விடயம்
வடக்கு - கிழக்கு தமிழர்களிடத்தில் கட்சிகள் அதிகரித்துள்ளன. ஓரளவு அதனை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வாருங்கள் என்று இந்திய துணை ஜனாதிபதி தம்மிடம் வலியுறுத்தியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கட்சிகளை வரையரைக்குள் உட்படுத்துதல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களிடத்தில் கட்சிகள் அதிகரித்து விட்டன. அவற்றை ஓரளவுக்கு ஒழுங்குக்கு கொண்டு வாருங்கள் என இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், சிறீதரன் மற்றும் எனது கைகளைப் பிடித்துக் கொண்டு வலியுறுத்தியதுடன், இந்த ஆழமான விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் வீட்டுக்கு வீடு கட்சிகள் உருவாகி விட்டன. மாவட்டத்துக்கு மாவட்டம், மாகாணத்துக்கு மாகாணம் என ஒவ்வொரு கட்சிகள் உருவாகிவிட்டன. எத்தனைக் கட்சிகள் உள்ளன என உண்மையில் அவர்களுக்கு தெரியாது என்றும் இந்திய உப ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இது ஆரோக்கியமானது அல்ல என்று அனுபவமும் அரசியல் ஞானமும் உள்ள ஒரு கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்த ஒருவர் தெரிவிக்கும் போது, அதை நாங்கள் கவனத்திற் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர் கூறிய கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடனான சந்திப்பு மிக ஆரோக்கியமானதாக இருந்தது. தமிழன் என்ற வகையில் அவரது அனுபவம் எமது கருத்துக்களை சொல்லக்கூடியதாகவும் நமது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.
அரசியலமைப்பு சம்பந்தமாக மட்டுமல்ல மாகாண சபை தேர்தல் சம்பந்தமாகவும் நாம் அவரிடம் தெரிவித்தோம் என சீ.வீ.கே.சிவஞானம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டினார்.