அரசியல் தலையீட்டில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்..! ஆராய்வதற்கு விரைந்த முக்கியஸ்தர்கள்
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றதா என்பதை ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா (Imran Khwaja) உட்பட இரண்டு பிரதிநிதிகள் நேற்றைய தினம் (10.05.2023) இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பிரதிநிதிகள் குழுவின் ஏனைய உறுப்பினராக பங்களாதேஷ் துடுப்பாட்ட சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் (Nazmul Hassan) உள்ளார்.
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.சி.சி. அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தகவல்களை கண்டறிய உள்ளனர்.

கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகள்
அரசியல் தலையீடுகள் குறித்து சிறிலங்கா கிரிக்கெட் தரப்பில் இருந்து பலமுறை முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய்ஷா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை ஐ.சி.சி. நியமித்துள்ளது.
இதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க, ஐ.சி.சி தலைவர் கிரே பார்க்லேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதுடன், இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிச் சந்திப்பொன்றை மேற்கொள்ளச் சந்தர்ப்பமொன்றைக் கோரியுள்ளார். இந்நிலையிலேயே இந்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சுதந்திரமாக செயல்பட வேண்டும்
2022இல் அரசியல் தலையீடு இலங்கை கிரிக்கெட்டில் நிரூபிக்கப்படுமாயின் ஐ.சி.சி. உறுப்புரிமை இரத்து செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.சி.சி.யின் விதிகளின்படி, விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் இறுதி நோக்கத்துடன் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri