சாள்ஸ் எம்.பி மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் சாள்ஸ் எம்.பி மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மன்னார் பொலிஸார் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் அலுவலகத்தில் வைத்து வாக்கு மூலத்தை பெற்றுச்சென்றுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரனிடம் புதுக்குடியிருப்பு பொலிஸார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
19.02.21 அன்று புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப்பகுதியில் உள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரணிகளில் கலந்துகொண்ட அரசியல் கட்சி சார்பான அனைவரிடமும் முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதித்துவப்படுத்தும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



