அநுரவின் தலையை ஏழு துண்டுகளாக உடைக்க நள்ளிரவில் சூனியம் செய்யும் பிக்குகள் - பின்னணியில் தீவிர திட்டம்
ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் சூனியம் செய்வதாக வெளியாகும் தகவல்களை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என ஜனபலய அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைப் படுகொலை செய்யும் நோக்கம் இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் உருவ பொம்மையை பயன்படுத்தி சூனியம்
விகாரமகாதேவி பூங்காவில் நடைபெறும் போராட்டத்தையும், அங்கு சூனியம் செய்வதாக கூறப்படும் தகவலை, சமூக வலைத்தளங்களில் கேலிக்குரிய விடயமாகப் பகிர்ந்தாலும், அவற்றின் பின்னணியையும் நோக்கத்தையும் கவனமாக ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உருவப் பொம்மையைப் பயன்படுத்தி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது தலையை ஏழு துண்டுகளாகப் பிளப்பது தொடர்பில் கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செயற்பாடுகளின் பின்னணியில் பாரதூரமான வன்முறை நோக்கம் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னணியில் கொலை திட்டம்
பண்டாரநாயக்க படுகொலையின் பின்னணியிலும் இவ்வாறான தேரர் உள்ளிட்டவர்களுடன் தொடர்புடைய சதித்திட்டங்கள் காணப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைப் படுகொலை செய்யும் நோக்கம் இந்த குழுவினரின் பின்னணியில் இருக்கக்கூடும் என்பது தனது சந்தேகம் மற்றும் தனிப்பட்ட மதிப்பீடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவர்கள் வெளியிடும் கருத்துகளையும் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.