யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற இடத்திற்குள் வாளுடன் நுழைந்த கும்பல்
யாழ்ப்பாணம் - நாச்சிமார் கோவிலடியில் உள்ள குளிர்பான கடையொன்றில் இளைஞர்கள் குழு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது வாளுடன் நுழைந்த குழுவினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழில் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
நாச்சிமார் கோவிலடியில் உள்ள குளிர்பான கடையொன்றில் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு இளைஞர்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.
அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் நுழைந்த நான்கு பேர் கொண்ட குழு அட்டகாசம் செய்து விட்டு கேக் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் தலை தெறிக்க ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கிருந்த வேறு மோட்டார் சைக்கிள்களையும் அக்குழு சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.