சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இலங்கையில், சீனாவின் சினோபார்ம் கோவிட் தடுப்பூசிக்கு முறையான ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட கோவிட் வைரஸ் தடுப்பூசி இலங்கையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் அனுமதியின்றி வழங்கப்படுவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
நோயாளிகளின் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன, சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சினோபார்ம் ஒப்புதல் தொடர்பில் தேசிய மருந்தாக்கல் ஆணையக உறுப்பினர்கள் சிலர் நீக்கப்பட்டமை தொடர்பில் கையளிக்கப்பட்ட கடிதங்களை ரத்துச் செய்யுமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சீன சினோபார்ம் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் வரை இலங்கையர்களுக்கு அது பயன்படுத்தப்படாது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நேற்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.