எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர்!
போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. அவ்வாறு எவராவது நினைப்பார்களாயின் அது வெறும் கனவு மாத்திரமேயாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரலகங்வில பகுதியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில்,'' எமது தலைமைத்துவத்தின் மீதும் அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளால் எமது அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. எமது அரசாங்கம் மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை அவர்களே பாதுகாக்கின்றனர்.
அண்மையில் சில எதிர்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்தாமல் அதனை காலம் தாழ்த்துமாறு கோரிக்கை முன்வைப்பதை செய்திகளில் பார்த்தேன்.
தேர்தல்கள்
இன்னும் இவர்களால் மக்களிடத்துக்கு சென்று கலந்துரையாட முடியாமல் உள்ளது. இவ்வாறான கோழைகளுக்கு அரசாங்கத்தை வீழ்த்துவது என்பது வெறும் கனவு மாத்திரமேயாகும்.
இந்த நாட்களில் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? எமது அரசியல் கொள்கை பிரகடனம் மற்றும் எமது அரசியல் கலாசாரத்துடன் அவர்களுக்கு மோதிக்கொள்ள முடியுமா? உண்மையில் அவர்களால் அதனை நினைத்துப் பார்க்க முடியாது.
எமது ஒழுக்க நெறிகளுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியுமா? முடியாது. அவ்வாறு நினைத்து பார்ப்பது வேடிக்கையான விடயமாகும்.
இதன் காரணமாகவே அவர்கள் எமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.''என கூறியுள்ளார்.