மின்சாரம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் ஒல்லிக்குளம் குடியேற்ற கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் (video)
மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் குடியேற்ற கிராம மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் (15.05.2023) காத்தான்குடி இலங்கை மின்சாரசபை அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
மின்சாரம் பெறுவதற்காக தாம் விண்ணப்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், வெளி இடங்களிலிருந்து குடியேறிய மக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள ஒல்லிக்குளம் குடியேற்ற கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்கள் மின்சாரம் பெறுவதற்கென விண்ணப்பித்து ஒரு வருட காலமாகியும் இதுவரை மின்னிணைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
கல்வி கற்க முடியாமல் மாணவர்கள் சிரமம்
இக்கிராமத்தில் மின்சாரமின்மையால் மாணவர்கள் கல்வி கற்க முடியாமலும், பொது மக்கள் பாம்புத் தொல்லையாலும் பெரும் அவலங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக காத்தான்குடி பிரதேச மின் அத்தியட்சகர் கனகசபை சிவேந்திரனிடம் கேட்டபோது குறித்த கிராமத்திற்கு மின்னிணைப்பை ஏற்படுத்த சுமார் 20 இலட்சம் ரூபா வரை செலவாகும்.
இதற்கான நிதி இலங்கை மின்சார சபையிடம் இல்லை. நிதி கிடைத்தவுடன் குறித்த பணியினை நிறைவு செய்யலாம் என தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
