இலங்கையில் பா. ஜ. கட்சி அமைவது தொடர்பில் மக்கள் குழப்பமடைய தேவையில்லை! - இந்து சமயப்பேரவையின் தலைவர்
இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி அமைவது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என இந்து சமயப் பேரவையின் தலைவர் தலைவர் சக்தி கிரீவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்படும் என்ற கருத்து நிலவி வருவது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய நாட்களில் பத்திரிகை ஊடகங்களில் பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அமைப்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றேன். இந்த கட்சியானது இந்து சமயத்துடன் நேரடியாகத் தொடர்புபடுவதன் காரணமாகவும், நானும் ஒரு இந்துமதத்தின் முக்கிய பதவியில் இருப்பதன் காரணமாக சில விடயங்களை நான் பதிவிடவேண்டி உள்ளது.
அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் சொல்கிறார்கள் இலங்கையிலே பாரதிய ஜனதா கட்சி அமைக்க முடியாது எனக் கூறுகிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயமிருக்கிறது.
இந்தியாவிலேயே இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியை இங்கே அமைக்க முடியாது. அது இந்தியத் திருநாட்டிற்குரிய கட்சி. ஆனால் இங்கே அமையப் போகின்ற கட்சியானது, இலங்கை திருநாட்டின் உடைய அரசியலமைப்புக்கு ஏற்புடையதான ஒரு கட்சிதான் இங்கே அமைய இருக்கின்றது என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எப்படி அமெரிக்கக் காங்கிரஸ் இங்கே இலங்கை காங்கிரஸ் என்று பதிவு செய்கிறார்களோ, அதே போல் சீன கம்யூனிஸ் இங்கே பதிவு செய்கிறார்களோ, அதேபோலத்தான் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் என்ன சொல்லப்படுகிறதோ அந்த அரசியலமைப்புச் சட்ட அனைத்து ஏற்பாடுகளுக்கும் உட்பட்டுத்தான் இந்த கட்சி பதிவு செய்யப்படும் என்பதை இங்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
இந்த விடயம் சம்பந்தமாக அரசியல் தலைவர்களோ அல்லது சமயத் தலைவர்கள் குழப்பமடையத் தேவையில்லை. பல கருத்துக்களைக் கூறுகின்றார்கள். நேற்று பத்திரிகையில் வெளிவந்திருந்தது வீதிகளிலே கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்த கட்சி ஆரம்பித்தால் இங்கே குழப்பம் ஏற்படும் எனப் போராட்டம் செய்திருக்கிறார்கள். இந்த பாரதிய ஜனதா கட்சியானது எந்த இனத்தையோ, மதத்தையோ சிதைக்கும் அமைப்பாக இருக்காது என்பதைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
இந்த பாரதிய ஜனதா கட்சியினுடைய தேவை என்னவென்றால் தர்மத்தை நிலைநாட்டுவது. இது இலங்கையிலோ அல்லது மாலைதீவிலோ அல்லது நேபாளத்திலோ அல்ல உலகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அமைய வேண்டும் என்பது தான் உண்மை. என்னைப் போன்றவர்களுடைய விருப்பமாகும்.
நாங்கள் ஆன்மீகவாதிகள் அரசியலோடு இணையப்போவதில்லை நாங்கள் எந்த அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகிக்கப் போவதில்லை. இலங்கையிலேயே பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிக்க உள்ளவர் என்னைச் சந்தித்து ஆசிபெற்றுச் சென்றார்.
அவரிடன் நான், நீங்கள் இலங்கை அரசியல் யாப்புகேற்றவாறா இந்த கட்சியை ஆரம்பிக்கவுள்ளீர்கள் எனக் கேட்டேன் அதற்கு அவர் தெளிவாகக் கூறினார், எந்தவித மாறுபாடும் இன்றி இந்தியத் திருநாடு தர்ம ரீதியில் ஒத்துப்போகுமே தவிர இந்தியத் திருநாடு எந்த விடயங்களில் தலையிட முடியாது.
எனினும் இலங்கையில் தர்ம நிலைநாட்டுவதற்காகவும், ஆன்மீக ரீதியாகத் தொடர்புகளை மாத்திரம் பேணுமே தவிர அரசியல் ரீதியாக இந்தியாவில் இருக்கும் பா ஐ க கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. எனவே இது ஒரு போலியான ஒரு மாய கருத்தினை மக்கள் மத்தியிலே விதைத்திருக்கின்றார்கள்.
எனவே அப்படி ஒருபோதும் நடக்க மாட்டாது. இந்தியத் திருநாட்டில் இருக்கின்ற ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் பிறிதொரு நாட்டிலே ஆக்கிரமிப்பு செய்வதற்கு விரும்பாதவர்கள் அப்படியான ஒரு எண்ணம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமாதானமாக வாழ வேண்டும்.
இந்து மதமும், பௌத்த மதமும் சரிநிகர் சமனாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். இதுதான் உண்மை, இதை விடுத்து தேவையற்ற கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்ப வேண்டாம் என மிகவும் தாழ்மையாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த கட்சி இந்து மக்களுக்கு மட்டுமே ஆரம்பிக்கப்படும் எனவும் கூறுகிறார்கள். அது பொய்யான விடயம், இது அனைத்து மதத்தவர்களும் இந்த கட்சியில் இணைந்து கொள்ள முடியும்.
எனவே குறித்த கட்சியின் இங்கே ஆரம்பிப்பது தொடர்பில் யாரும் குழப்பமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.



