மட்டக்களப்பில் சட்டவிரோத காடழிப்புக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை
மட்டக்களப்பு (Batticaloa) - கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முறுத்தானை படுகாட்டு வயல் பிரதேசத்தில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக அரச காணியை அபகரிக்க சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று மாலை (10.05.2024) இடம்பெற்றுள்ளது.
காடழிப்பு நடவடிக்கை
குறித்த பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் கனரக இயந்திரங்களின் துணை கொண்டு பாரிய மரங்கள் அழிக்கப்பட்டு காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு பிரதேச மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட செயலகம் மற்றும் கிரான் பிரதேச செயலகமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையினால் இந்த சட்டவிரோத காணி சுவீகரிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் இன்று(11) மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் இதன்போது பயன்படுத்தப்பட்ட 2 கனரக இயந்திரங்களில் ஒன்றை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் எல்லைக் கிராமங்களில் உள்ள அரச மற்றும் வன இலகாவிற்கு சொந்தமான காணிகள் பல தன வந்தனர்களினால் காடுகள் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டு வருவதாக பிரதேச பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |