டீசலை ஏற்றி வந்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது:மேலும் ஒரு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில்
இலங்கைக்கு டீசலை ஏற்றி வந்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பலுக்கான 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு செலுத்தியதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ள 37 ஆயிரத்து 300 மெற்றி தொன் டீசலை இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 4 ஆம் திகதி முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையான காலத்தில் எரிபொருளை ஏற்றிய நான்கு கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
4, 6, 9 மற்றும் 12 ஆம் திகதிகளில் இந்த கப்பல்கள் இலங்கைக்கு வந்தடைய உள்ளன. அந்த கப்பல்களுக்கு பணத்தை செலுத்தி எரிபொருளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை பணம் செலுத்தப்பட்டுள்ள கப்பலில் இருக்கு டீசலை இறக்கும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாமத கட்டணத்தை செலுத்த வேண்டிய கப்பல்கள் எதுவும் இலங்கை கடல் எல்லைக்குள் இல்லை எனவும் சமிந்த ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.