உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திவரும் கட்சிகள்!
வவுனியா
வவுனியா மாநகரசபை உள்ளிட்ட மூன்று சபைகளில் போட்டியிட மக்கள் போராட்ட முன்னணி இன்று (17.03) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியள்ளது.
அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் குறித்த முன்னணி போட்டியிடவுள்ளது.
அதற்கான கட்டுப்பணத்தை அந்த அமைப்பின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர் என்.பிரதீபன் மற்றும் காமினி உட்பட முக்கியஸ்தர்கள் செலுத்தியிருந்தனர்.
வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியது ஜனநாயக தேசிய கூட்டணி.
வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தேசிய கூட்டணி வவுனியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (17.03) கட்டுப்பணம் செலுத்தியது.
அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேசசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் குறித்த கூட்டணி போட்டியிடவுள்ளது.
அதற்கான கட்டுப்பணத்தை சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ப.உதயராசா தலைமையிலான குழுவினர் செலுத்தியிருந்தனர்.
தமிழ் மக்கள் கூட்டணி
வவுனியாவில் 2 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் மக்கள் கூட்டணி.
வவுனியா மாவட்டத்தில் 2 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிட சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் 5 உள்ளுராட்சி சபைகளில் வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணி கட்டுப்பணம் செலுத்தியது.
அதற்கான கட்டுப்பணத்தை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தமிழகன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியிருந்தனர்.
செய்தி: திலீபன்
கிளிநொச்சி
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக மூன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, சிறீலங்கா சுதந்திரக்க கட்சி மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியன இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
கட்டுப்பணம்
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாவட்ட அமைப்பாளர் மரியசீலனும் தேசிய மக்கள் சக்தி சார்பாக கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகனும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனு எதிர்வரும் 24ம் திகதி முதல் -27ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன யாழில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
பெரமுனவின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீத்நாத் யாழ் தேர்தல் திணைக்களத்தில் இன்று காலை இக் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
தொழிலதிபர்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது.
குறித்த சபைகளில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை கட்டுப்பணத்தை சுலக்சன் தலைமையிலான குழுவினர் செலுத்தியுள்ளனர்.
யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக யாழ்ப்பாணத்தின் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகள் திங்கட்கிழமை (17.03.2025) தமது கட்டுப்பனங்களை மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளனர்.
திருகோணமலை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஐக்கிய தேசிய கட்சியின் அங்கீகாரமளிக்கப்பட்ட முகவரும் ,மூதூர் தொகுதி அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் இன்று (17) மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |