நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும்: சுனில் ஹந்துநெத்தி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களில் தமது கட்சி ஆட்சி அமைத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசாங்கம் முன்னுதாரணமாக வீண் விரயம், ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மக்களிடம் களவாடப்பட்ட பணம்
மக்களிடம் களவாடப்பட்ட பணம் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்காக புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் எனவும் சில சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நிதிச்சலவை, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதாக வாக்குறுதியளித்து செலுத்தப்படாத வரியின் தொகை ஒரு ட்ரில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவற்றில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் ஆயிரம் பில்லியன் ரூபா வரையில் வரி செலுத்தவில்லை எனவும், பெறுமதி சேர் வரி சுமார் 163 மில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |