சமூகமயமாக்கலில் பெற்றோரும் பாடசாலையும்
சமூகவியலின் முக்கிய ஆய்வுப் பொருளாக சமூகமும் அதனுடைய மக்கள் குழுவும் அமைகின்றது. சமூகமயமாக்கல், சமூகவியல் என்ற விடயம் கிரேக்க தத்துவஞானியான பிளேட்டோவின் காலம் முதல் உருவாகி இருக்கலாம் எனவும், சமூகவியலை முறையாக முதன் முதலில் விளக்கியவர் பிரெஞ்சு மெய்யியலாளர் ஆகஸ்ட் என்பவர் என வரலாறு கூறுகின்றது.
இங்கு சமூகவியல் எனும் பதத்திற்கும் மனித இனத்திற்கும் மிகமுக்கிய தொடர்பு உள்ளது. மனித இனம் என்பது இருகால் உயர் விலங்கினத்தை சேர்ந்த ஒரு இனமாக சமூகம் அங்கீகரித்துள்ளது. மனிதன் முதன் முதலில் சமூகமயமாக்கல் விடயங்களை தனது வீட்டிலேயே கற்றுக்கொள்ள முயல்கின்றான்.
அங்கு கற்றுக்கொள்ளும் சகல சமூகமயமாக்கல் விடயங்களுக்கும் அவர்களது குடும்ப, சமூக உறுப்பினர்கள் பிரதான பங்காளிகளாக அமைகின்றனர். இதில் சில குறுகிய அம்சங்களையே குழந்தைகளால் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
சமூகமயமாக்கல்
அடுத்து மனித இனத்தின் சமூகமயமாக்கலின் பிரதான இடத்தினை பெற்றுக்கொள்கின்றது. காரணம் ஒரு குழந்தை தனது எண், எழுத்து, ஆற்றலை அங்கு தான் முறையாக பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றது.அதன் பின் படிப்படியாக அறிவு, திறன், மனப்பாங்கு நிலைக்கு இட்டுச் செல்லப்படுகின்றது.
இவ்வாறான காலகட்டத்தில் தான் மனித சமூகம் சமூக உறவுகள், சமூக நடத்தைகள். சமூக அமைப்பு முறை, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை குழந்தை கற்றுக்கொள்தற்கு பாடசாலைகள் அக்கறையுடன் செயற்படத் தொடங்கும் இங்கு சமூக ஒழுங்கு, ஒழுங்கின்மை, மாற்றங்கள் ஆகியளை பற்றிய அறிவுத் தொகுதிகள் உருவாக்கும் நோக்கின் செயற்படுவது பாடசாலைகளின் பணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
ஒரு குழந்தை தனது ஐந்து வயதினை பூர்த்தி செய்து பாடசாலைக்குள் நுழைந்து பத்தொன்பது வயது வரை அதன் கட்டமைப்புக்குள் வளர்கின்றது.
பாடசாலைக் கல்வி
தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகள் கல்வி கற்கும் ஒரு பிள்ளை தனக்கு தேவையான அனைத்து சமூகவியல் பண்புகளை பாடசாலைக்கல்வி, இணைப்பாட விதான செயற்பாடுகள் மூலம் பெற்றுக்கொள்கின்றான், இலங்கை பாடசாலைகளின் கலைத்திட்ட வடிவமைப்பில் மாணவர்களின் சமூகமயமாக்கல் செயற்பாடுகளுக்கு நிறைவான வழிகாட்டல்களும் சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டிருப்பது கண்கூடு.
இதனடிப்படையில் பாடசாலையினை ஆரம்பிப்பதற்காக பாடசாலையினுள் கால் எடுத்து வைக்கும் ஒரு பிள்ளை பூரணமான சமூகமயமாக்கல் திறன்களை பெற்று சமூக நற்பிரஜையாக சமூகத்தினுள் கொண்டு சென்று விடும்வரை பாடசாலையில் பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களின் சேவை அளப்பரிய பணியாக காணப்படுகின்றது.
ஒரு குழந்தை தனக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் சமநிலை ஆளுமைப்
பண்புகளையும் நிறைவாக தன்னகத்தே வளர்த்துக் கொள்வதற்கு பாடசாலை
கலைத்திட்டத்தில் (மறைக்கலைத்திட்டம்) பக்கபலமாக காணப்படுகின்றது.
இந்த கலைகட்டத்தின் செயற்பாடுகளாக காலைப்பிரார்த்தனை, விளையாட்டுப்போட்டி, தமிழ்மொழித்தினம். ஆங்கில மொழித்தினம். கிறிஸ்தவ. இஸ்லாமிய, பௌத்த. இந்துசமய விழாக்கள் முதியோர் தினம், மன்ற செயற்பாடுகள், மாணவர் நாடாளுமன்ற செயற்பாடுகள். செயற்பட்டு மகிழ்வோம் செயற்பாடுகள். நூலக செயற்பாடுகள் எனப் பல்வேறுபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது.
மாணவர்களின் கல்வியில் பெற்றோர் பங்கு
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு நிறைவான கல்வி அறிவை மாத்திரம் வழங்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்து மாறி தங்களது குழந்தை பூரணமான ஒரு மனிதனாக(சமநிலை ஆளுமை) மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். குழந்தைகளை படி படி என அவர்களை நசுக்கி அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம், ஆசை என்பவற்றை இல்லாமல் செய்து வெறுப்பை ஏற்படுத்துகின்றனர்.
அதைவிடுத்து கல்வியை ஆர்வம், ஆசை என்பவற்றுடன் கற்பதற்கு அவர்களுக்கு வழிசெய்ய முயற்சிக்க வேண்டும். தற்காலத்தில் கல்வி என்பது வயிறு நிறைய உணவை உண்டு பின் அதை வாந்தி எடுப்பது போல் ஆகிவிட்டது. பாடங்களைப் பாடமாக்குதல், நினைவில் வைத்திருத்தல் அதைப்பரீட்சையின் போது கொட்டி விடுதல் என்றாகி விட்டது.
இந்நிலையில் இருந்து மாறி ஒரு குழந்தை தனக்கு தேவையான அறிவு. திறன், மனப்பாங்கு விருத்தி என்பவற்றை வளர்ப்பதற்கு அதிக சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் இதற்கு பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.