இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன தலைவர் கோரிக்கை - ஐ.நா தடை விதிக்குமா..!
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு பாலஸ்தீன தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் முஸ்தபா பர்கூட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்துள்ளது, தற்போதும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை 3,000-க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ள இஸ்ரேல், போர்நிறுத்தத்திற்குப் பின்னர் காசாவில் 1,300-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது குடியேற்றவாசி பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்த இஸ்ரேல் அனுமதி அளிக்கிறது.
இப்போது அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் மீதே தாக்குதல்களை நடத்தும் நிலைக்குச் சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பையும் மதிக்க விரும்பும் ஒவ்வொரு ஐக்கிய நாடுகள் உறுப்பு நாட்டிற்கும், இந்த மனித உரிமை மீறல்களுக்காக இஸ்ரேல் மீது உடனடியாக தடைகளை விதிக்க வேண்டிய கடமை உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஒருவேளை உறுப்பு நாடுகள் இஸ்ரேல் மீது தடைகளை விதிக்கத் தவறினால், சர்வதேச அளவில் மேலும் பல குற்றங்களையும் அத்துமீறல்களையும் செய்ய இஸ்ரேலுக்கு அது ஊக்கம் அளிப்பதாகவே அமையும் என முஸ்தபா பர்கூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.