அரச வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் சத்திரசிகிச்சை மையங்குகள்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை அரங்குகள் நிரம்பி வழிவதை தவிர்ப்பதற்காக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை அரங்குகளை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த விடயம் தொடர்பான திட்ட அறிக்கையை தயாரித்து உடனடியாக தன்னிடம் கையளிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பை சுற்றியுள்ள பல வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சை அரங்குகளில் இடவசதியின்மை காரணமாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்காக நோயாளர்கள் நீண்ட காலமாக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சாகல ரத்நாயக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
இது தொடர்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் பல தனியார் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடியதாகவும் அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைகளில் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படாத சந்தர்ப்பங்களில் நியாயமான வாடகைக்கு அரச வைத்தியசாலைகளுக்கு வழங்க முடியும் என தனியார் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிலையங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது மற்றும் அரசாங்க விசேட வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களை அவற்றிற்கு எவ்வாறு அனுப்புவது என்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரித்து வழங்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவிடம் பணிமனை பிரதானி சாகல ரத்நாயக்க அறிவித்துள்ளார்.