மக்களை இலக்கு வைக்கும் அநுர அரசு.. சபையில் நாமல் குற்றச்சாட்டு
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலமானது, 1988–89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதைப் போன்ற அடக்குமுறைகளுக்கு வழிவகுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த போதே இன்று (20) இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுவின் அடையாளமாக பச்சைக் குத்திய ஒருவரைக் கைது செய்வதற்கு புதிய சட்டம் தேவைதானா என அவர் கேள்வியெழுப்பினார்.
அடக்குமுறை
மேலும், பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் அடக்குமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னர் 'IRC' (Island Reconvicted Criminals) எனக் குறிப்பிடப்பட்ட நபர்களை அடையாளம் காணும் போது, மனிதர்களின் தலைமுடி பாணி மற்றும் தாடியைக் கொண்டு இலக்கு வைக்கப்பட்ட பழைய சம்பவங்களை இதன்போது நாமல் ராஜபக்ச நினைவுகூர்ந்தார்.
குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய பச்சைக் குத்தல்கள் குறித்து நீதி அமைச்சர் அளித்த விளக்கங்களைக் சுட்டிக்காட்டி, தோற்றத்தை வைத்து மனிதர்கள் இலக்கு வைக்கப்படலாம் என சந்தேகம் எழுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடுகளும் கொலைகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில், மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணத் தவறிய அரசாங்கம், வேலையில்லாப் பிரச்சினை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல், இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.