நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தினால் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை: டிரான் அலஸ்
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தினால் அடிப்படை உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் நேற்று(03)நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் குற்றம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நிகழ்நிலை பாதுகாப்புச்சட்டம் காரணமாக பொதுமக்கள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.ஆனால் அது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும்.
அவ்வாறு அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலான ஒரு சட்டப் பிரிவேனும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக யாரும் சுட்டிக்காட்ட முடியுமா? அவ்வாறு சுட்டிக்காட்ட முடியாது என்று சவால் விடுக்கின்றேன் எனக்குத் தெரிந்த வரையில் அப்படியான சரத்து ஏதேனும் இந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படவே இல்லை.
அதே போன்று அவ்வாறான ஏதேனும் ஒரு சரத்து சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக யாரேனும் நிரூபித்தால் உடனடியாக அதில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் டிரான் அலஸ் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




