கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
வெளிநாடு ஒன்றில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த விமான பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சிகரெட் கையிருப்பின் பெறுமதி சுமார் 33 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் கைது
சந்தேக நபர் கொச்சிக்கடை - பல்லன்சேன பிரதேசத்தில் வசித்து வரும் 47 வயதுடைய வர்த்தகர் எனவும் அவர் அடிக்கடி விமானங்களில் பயணிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அபுதாபியில் இருந்து EY-394 Etihad Airlines விமானத்தில் இன்று அதிகாலை 03.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேகநபர் எடுத்துச் சென்ற பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22,000 மென்செஸ்டர் ரக சிகரெட்டுகள் அடங்கிய 110 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பிணை
தற்போது சந்தேகநபருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் கொண்டு வந்த சிகரெட்டுகளின் அளவுடன் சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை, வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் எதிர்வரும் 11ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.