ஏமன் அருகே எண்ணெய் கப்பல் கடத்தல்: சோமாலிய கடற்கொள்ளையர்கள் மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம்
ஏமன் கடற்கரையில் கடத்தப்பட்ட எண்ணெய் டாங்கர் கப்பல் சோமாலியாவை நோக்கி கொண்டு செல்லப்படுவதாக சோமாலிய பாதுகாப்பு அதிகாரிகள் பிபிசி ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஏமன் கடலோர காவல்படையினர் வழங்கிய தகவலின்படி, 'எம்டி யுரேகா' (MT Eureka) என்ற இந்த எண்ணெய் டாங்கர் கப்பல் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டு தற்போது சோமாலியாவை நோக்கி பயணித்து வருகிறது.
ஏடன் வளைகுடாவில் உள்ள கானா (Qana) துறைமுகத்திற்கு அருகில் வைத்து இக்கப்பலை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமாலியாவின் அரை தன்னாட்சி பெற்ற பண்ட்லாந்து (Puntland) பிராந்தியத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, ஏடன் வளைகுடாவில் அமைந்துள்ள காண்டலா (Qandala) என்ற கடலோர நகருக்கு அருகிலுள்ள ஒதுக்குப்புறமான பகுதியிலிருந்து கடற்கொள்ளையர்கள் புறப்பட்டுச் சென்று இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
பெரிய கடத்தல் சம்பவம்
இந்தச் சம்பவம் கடந்த பத்து நாட்களில் அதே பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய கடத்தல் சம்பவமாகப் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி 'ஹானர் 25' (Honor 25) என்ற கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருந்தனர். அந்த கப்பலில் மொகாடிஷு நகருக்கு கொண்டு செல்லப்பட்ட 18,500 பீப்பாய்கள் எண்ணெய் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது கடத்தப்பட்டுள்ள 'எம்டி யுரேகா' கப்பல் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவின் கொடியுடன் பயணித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5:00 மணியளவில் ஆயுததாரிகள் கப்பலுக்குள் புகுந்து அதைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தக் கப்பல் அடுத்த சில மணிநேரங்களில் சோமாலிய கடல் எல்லைக்குள் நங்கூரமிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஏமனின் அல்-முகல்லா அருகே மற்றொரு சரக்குக் கப்பலை ஆயுதமேந்திய நபர்கள் சிறிய படகில் நெருங்கியதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் மீண்டும் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.