கோவிட் தொற்றாளிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் முரண்பாடான தகவல்
கோவிட் தொற்றாளிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பில் செயற்படும் முன்னணி மருத்துவர்களைக் கோடிட்டு, கொழும்பின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நாளாந்தம் நடத்தப்படும் பி.சி.ஆர் மற்றும் எண்டிஜன் சோதனைகளின்படி, தற்போது நாள் ஒன்றுக்கு 4000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.
எனினும் 2500 முதல் 2900 வரையான தொற்றாளிகளின் எண்ணிக்கையே, அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படுவதாக மருத்துவர்கள் கூறுவதாகக் கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் பரவும் தற்போதைய வேகத்தில் எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை 5000 ஐ எட்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் சுகாதார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.