அநுர தரப்பிற்கு கடன் மறுசீரமைப்பு குறித்த அடிப்படை அறிவு கிடையாது: ஹர்ஷ டி சில்வா
அநுரகுமார திஸாநயாக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு, கடன் மறு சீரமைப்பு தொடர்பிலான அடிப்படை அறிவு கூட கிடையாது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மாவத்தகம பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவினால் கடன் மறுசீரமைப்பு குறித்த அடிப்படை புரிதல் குறித்து இலங்கை பிணை முறி உரிமையாளர்கள் ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இலங்கை பிணைமுறி உரிமையாளர்கள் தமது கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு தரப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.
இதன் போது, தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவிற்கு கடன் மறு சீரமைப்பு குறித்த கொள்கைகளில் புரிதல் இல்லை என அவர்கள் கூறியதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நடைமுறையில் உள்ள கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு மாற்று யோசனை சமர்ப்பிப்பதாக தேசிய மக்கள் கூறி வருவது தொடர்பில் தங்களது ஆச்சரியத்தை அவர்கள் வெளியிட்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய கடன் மறு சீரமைப்பு நடைமுறையை குழப்பிக் கொண்டால் 2022 ஆம் ஆண்டு விழுந்த இடத்தை விட பாரிய மோசமான நிலைக்கு நாடு விழும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |