அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்: ஹரிணியின் முன்மொழிவை மறுத்த சஜித்
அரசியலமைப்பு பேரவையில் (Constitutional Council) சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பதில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சபையில் வெற்றிடமாகியுள்ள மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே, இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
அனுலா விஜேசுந்தர, பிரதாப் ராமானுஜம் மற்றும் தினேஷா சமரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், அரசியலமைப்பின் படி, இந்த மூன்று உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவரினதும் ஒருமித்த இணக்கப்பாட்டுடன் மட்டுமே நியமிக்கப்பட முடியும்.
மறுப்பு தெரிவிக்கும் சஜித்
இந்த நிலையில், பிரதமர் 7 பெயர்களையும், எதிர்க்கட்சித் தலைவர் 10 பெயர்களையும் முன்வைத்துள்ளனர்.

அதில், பிரதமர் முன்மொழிந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவரின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் நிராகரித்துள்ளார். அவர், அண்மைக்கால செயற்பாடுகள் காரணமாக பக்கச்சார்பின்றி செயற்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது என சஜித் பிரேமதாச வாதிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தையில் சபாநாயகரையும் இணைத்துக் கொள்ள பிரதமர் யோசனை தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசியலமைப்பின் படி இது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமே எடுக்க வேண்டிய முடிவு எனக்கூறி சஜித் பிரேமதாச அதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று சிவில் சமூக உறுப்பினர்களின் நியமனம் தாமதமாவதால், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொலிஸ் மா அதிபர் போன்ற முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை அங்கீகரிக்கும் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.