அரசாங்கத்தின் தலையீட்டினால் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது
அரசாங்கத்தின் தலையீட்டினால் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தலையிட்டு விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளாதிருந்தால், ஒரு லிட்டர் டீசலின் விலை 750 ரூபாவாக உயர்ந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் எரிபொருள் நிறுவனங்கள் நட்டம் ஏற்படும் காலங்களில் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், கடந்த நாட்களில் நாட்டில் காணப்பட்ட எரிபொருள் வரிசைகளுக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் எரிபொருள் சந்தையில் கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் பங்கு 53% முதல் 54% என்ற அளவிலேயே இருந்தது என தெரிவித்துள்ளார்.
ஆனால், தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்ததன் காரணமாக, தற்போது எங்களது சந்தைப்பங்கு 75% முதல் 80% வரை அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் நட்டத்தை எதிர்கொள்வதில்லை; மாறாக, அந்தப் பாரத்தை அரசாங்கத்தின் மீதே சுமத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த கால அரசாங்கங்கள் தனியார் நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை விமர்சித்த அவர், தனியார் நிறுவனங்களின் வருகையால் சந்தையில் போட்டி ஏற்பட்டு எரிபொருள் விலை குறையும் என்று கூறப்பட்ட வாதங்கள் அனைத்தும் பொய் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையிலேயே தற்போதைய அரசு எரிபொருள் விலையைத் திருத்தியமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு சுமார் 100 ரூபாய் வரை வரிச் சலுகை வழங்கி, விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது, அந்தப் பாதிப்பை எப்படித் தாங்கிக்கொண்டு மக்களுக்குச் சலுகை வழங்குவது என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். ஊழலை ஒழித்ததன் மூலம் அரசாங்கத்திடம் பெருமளவு பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பணம் இத்தகைய நெருக்கடி காலங்களில் மக்களுக்குச் சலுகைகளை வழங்கவே பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நாட்டு மக்களின் நலனுக்காகத் தேவைப்படின் மீண்டும் மானியங்களை வழங்கி, விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என ஜனக ராஜகருணா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam