சஹ்ரானை தூண்டிவிட்டவர் நௌபர் மௌலவி! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என நௌபர் மௌலவியை உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இப்ராஹிம் சகோதரர்களும், பல சர்வதேச அமைப்புகளும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு இந்த தாக்குதலை நடத்த நிதியளித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர், கட்டார் நாட்டைச் சேர்ந்த நௌபர் மௌலவி, சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்து தாக்குதலை நடத்த தூண்டிவிட்டார் என்பது தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையில் பிறந்த இரண்டு அவுஸ்திரேலிய நாட்டவர்களான லுக்மான் தாலிப் மற்றும் அவரது மகன் லுக்மான் தாலிப் அகமது ஆகியோர் மாலைத்தீவில் நான்கு மத தீவிரவாதிகளை சந்திக்க சஹ்ரானுக்கு ஒழுங்கு செய்துகொடுத்துள்ளனர்.
இந்த தீவிரவாதிகள் 2016 முதல் தாக்குதல்கள் நடக்கும் வரை பல சந்தர்ப்பங்களில் சஹ்ரானை சந்தித்ததாகவும், லுக்மான் தலிப் அகமது இலங்கையில் கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்துள்ளதாகவும் உளவுத்துறை தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“Save the Pearl” என்ற சர்வதேச அமைப்பு சஹ்ரானுக்கும் அவரது குழுவினருக்கும் சட்ட உதவி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனாவிலிருந்து இலங்கைக்கு 1,440 வாள்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பாக 35 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஏழு பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.