வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு
சட்டவிரோத வழிகளில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தலையிட முடியாது என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மஹேந்திர குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சுற்றுலா அல்லது கல்வி கற்பதற்கான வீசாவைப் பெற்று இலங்கையில் இருந்து வெளியேறும் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று முழுநேர உழைப்பில் ஈடுபடுகின்றனர்.
சட்டரீதியான பொறுப்புக்கள்
இவ்வாறானவர்களுக்கு தொழில் இடங்களில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் எமது பணியகத்துக்கு எதுவித சட்டரீதியான பொறுப்பும் கிடையாது.
தற்போதைக்கு மத்திய கிழக்கு நாடுகளின் தொழில் வாய்ப்புகளுக்கு மேலதிகமாக ஐரோப்பிய நாடுகளில் தொழில்சார் வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுகின்றது அவ்வாறான தொழில்களுக்கான தகைமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் கைநிறையச் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறான தொழில்வாய்ப்புகளுக்கு சுற்றுலா வீசா அல்லது கல்வி நடவடிக்கைகளுக்கான வீசாவில் சென்று அங்கு சென்ற பின் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டால், அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் சட்டரீதியான முறையில் எங்களால் எவ்வித தலையீடும் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.