தமிழர் பகுதியில் அபிவிருத்தி பணிகள் தொடரும்..! ஆளுநர் உறுதி
நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களின் ஆதங்கங்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், உங்கள் பிரதேசத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான முழுமையான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அத்துடன், ஒரே நாளில் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எங்களுக்கும் விருப்பம் இருந்தாலும், நடைமுறையில் அதனைப் படிப்படியாகவே முன்னெடுக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் 38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் (குளியலறை, மலசலகூட வசதிகளுடன்) திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று(16.04.2026) காலை இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் ச.சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இறங்குதுறை புனரமைப்பு
நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
நான் 1991ஆம் ஆண்டு எனது முதல் நியமனமாக இந்தப் பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டேன். அப்போதிலிருந்தே இந்த மக்கள் கடல் போக்குவரத்துச் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதை நான் அறிவேன். அன்றைய காலகட்டத்தில், 'குமுதினி' படகுதான் இந்தக் கடற்போக்குவரத்துக்குப் பொருத்தமானது என மக்கள் கூறினார்கள்.

அதேபோல, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டும் எனவும் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தார்கள். நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பின்னரும் இந்த இறங்குதுறையைப் புனரமைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டேன்.
ஆயினும் அது முழுமையாகச் சாத்தியப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் அந்த வேலைத்திட்டங்களுக்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது மக்களுக்குச் செய்ய நினைத்த பல விடயங்கள், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில்தான் நடைமுறைச் சாத்தியமாகின்றன.
அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுப்பு
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்காகக் அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்கள் மட்டுமன்றி, இந்த அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் நெடுந்தீவு உள்ளிட்ட எமது அனைத்துத் தீவுகளின் அபிவிருத்தியிலும் அதீத கரிசனை கொண்டுள்ளனர்.

நெடுந்தீவுக்கான படகுகளைக் கட்டுவதில் குறிகாட்டுவான் இறங்குதுறையில் உள்ள சிரமங்கள் குறித்து கடந்த ஆண்டு நான் இங்கு வந்தபோது மக்கள் சுட்டிக்காட்டினார்கள்.
தற்போது குறிகாட்டுவான் இறங்குதுறையும் புனரமைக்கப்படவுள்ளது. எனவே, அந்தப் பிரச்சினையும் விரைவில் தீர்க்கப்படும். நெடுந்தீவு இறங்குதுறையை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். எந்தத் திணைக்களத்தின் ஊடாக என்றாலும், மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam