காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் பிணையில் செல்ல அனுமதி
கைது செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் சனிக்கிழமை(19) மதியம் மன்னார்
நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்திய தேவைகளுக்காக மனுவல் உதயச்சந்திரா நேற்று மன்னாரில் இருந்து கொழும்பிற்கு சென்ற நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் ''மனுவல் உதயச்சந்திராவை கைது செய்யவே வந்துள்ளோம். அவர் வருகை தந்தவுடன் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவருமாறு" உறவினர்களிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரீர பிணையில் விடுதலை
இதன்பின்னர் இன்று (19) காலை வைத்திய தேவைகள் முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில், மன்னார் பொலிஸ் நிலையத்தில் மனுவல் உதயச்சந்திரா முன்னிலையாகிய போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விசாரணையின் பின்னர் மன்னார் பொலிஸார் அவரை இன்றைய தினம்(19) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அவரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாங்குளம் நீதிமன்ற விசாரணை ஒன்றுக்கு முன்னிலையாகாத நிலையிலே அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |