வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவு சஜித்துக்கே..! ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு
வடக்கு - கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று இணைந்து
சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருக்கின்றார்கள் என
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் த. தயானந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது பிரசாரங்களை முன்னெடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் காரியாலயமானது கிரான்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் தேர்தல் செயற்பாட்டினை நோக்காக கொண்டு இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட போது, மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் தயாநந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
"கடந்த காலத்தை பொறுத்தவரையில் எங்களுடைய ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டிலே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கூட பெற முடியாத சந்தர்ப்பத்தில் எப்படி ஜனாதிபதியாக வர முடியும் என்கின்ற கருத்து காணப்படுகின்றது.
ரணில் - ராஜபக்ச அரசாங்கம்
எனவே, இந்த நாட்டு மக்கள் உண்மையில் எதிர்பார்த்து நிற்பது சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்பது.
வடக்கு - கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருக்கின்றார்கள்.
உண்மையில் சஜித் பிரேமதாச ஜாதி, மதம், இனங்களை கடந்து அனைவரும் ஒன்று என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே ஒரு தலைவர்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு இவருக்கு வாக்களிக்க வேண்டும்.
தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ரணில் - ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமையின் பிரகாரம் ராஜபக்ச அரசாங்கம் கூறுகின்றது சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்று.
ஜனாதிபதி தேர்தல்
அனைவரும் ஒன்று திரண்டு எங்களுடைய சஜித் பிரேமதாசவை வெல்ல வைக்க வேண்டும்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியை பொறுத்தவரையில் இரட்டை அங்கத்தவர் தேர்தல் தொகுதி அதாவது முஸ்லிம் தேர்தல் தொகுதி அமைப்பாளர் மற்றும் தமிழ் தேர்தல் தொகுதி அமைப்பாளர் காணப்படுகின்றது.
இரண்டு சமூகங்களும் இணைந்து நாங்கள் இவ்வருடம் ஏமாந்தது போதும். இனி ஏமாற்றப்படக்கூடாது. நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைக்க வேண்டும்.
கடந்த கால வரலாற்றை உற்று நோக்குகின்ற பொழுது தமிழ் பொது வேட்பாளர் என்பது முன்னாள் பிரதமர் நீதி அரசர் விக்னேஸ்வரனின் தனிப்பட்ட ஒரு முடிவு. அவர் தங்களுடைய பிள்ளைகளை வேறு ஒரு விதமாக இனவாதத்திற்குள் உட்படுத்தி இந்த தேர்தலுக்குள் தமிழ் வேட்பாளரை உள் நிறுத்துவது என்பது பாரிய விளைச்சலை கொண்டு வரும்.
எதிர்காலத்திலே இவ்வாறான ஒரு பிரச்சினையை உண்டு பண்ணாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு தேவையற்ற விடயமாகவே கருதப்படுகின்றது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |