மட்டக்களப்பில் அதிகரிக்கும் தொற்றாநோய் தடுப்பு நடவடிக்கை ஆரம்பம்..!
மட்டக்களப்பில் அதிகரித்து வரும் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பழக்கங்களை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(01.06.2026) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய நிகழ்வில் கலந்துக் கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன், பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மோகனகுமார், மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார், வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
புகைத்தலை கட்டுபடுத்துவதன் அவசியம்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புகையிலை பயன்பாடு பற்றி பாதிப்புக்கள் பொதுவாகவே நாம் அறிந்தது தான். பெரிய சவாலாக மாறிக் கொண்டிருக்கும் இதுபோன்ற பழக்கங்களை எமது சமூகத்தில் இருந்து முற்றாக அழிக்க வேண்டும்.

தொற்றாநோய்களுக்கு பல ஆபத்து காரணிகள் இருந்தாலும், தவிர்க்கக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய ஆபத்துக் காரணிகள் பலவற்றுக்குள்ள மிகவும் முக்கியமான ஒரு காரணியாகவே புகைத்தல் பார்க்கப்படுகின்றது. மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் வருவதற்கு புகைத்தல் முக்கிய காரணியாக உள்ளது.
சுற்றோட்டத் தொகுதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்ற இந்த பழக்கம், வேறு விதமான கொடிய நோய்களையும் ஏற்படுத்துகின்றன. எனவே, இவற்றை நாங்க கட்டுப்படுத்த வேண்டும், தடுக்க வேண்டும், குறைக்க வேண்டும்.
அதற்கு பாரிய நடவடிக்கைகள் எல்லாம் நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
