எந்தவொரு பயங்கரவாத தடுப்புச் சட்டமும் தேவையில்லை: சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை என சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகராட்சி மன்றின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உபதவிசாளர் ஞா.கிஷோர் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான பிரேரணையினை சபையில் முன்வைத்து உரையாற்றினார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம்
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத குறித்த விடயத்தினை சபையில் பிரேரிக்க முடியாது என தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

எனினும் தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தினை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில்;, முன்மொழிப்பட்டுள்ள பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவும், எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.