உலகில் எங்கும் இலங்கையை போன்று முட்டாள்தனமான கொள்கைகள் உடைய நாடு கிடையாது – கலாநிதி ஏ.ரீ. ஆரியரட்ன
உலகில் எங்கும் இலங்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான கொள்கைகளை உடைய நாடு கிடையாது என சர்வோதய அமைப்பின் தலைவர் கலாநிதி ஏ.ரீ.ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டுக்கு நாள் தோறும் வெளிநாடுகளில் வேலை செய்து கையில் எந்தப் பணமும் இன்றி பலர் நாடு திரும்புகின்றனர்.எனது மகன் வெளிநாடு ஒன்றின் விமான சேவை நிறுவனமொன்றின் பணிப்பாளர், அவருக்கு கோவிட் இல்லை.
அவர் எங்களைப் பார்வையிட வந்து நான்கு ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கின்றார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலுக்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவிட வேண்டும் விமான டிக்கட்டுக்கு சில லட்சங்கள் செலவிட வேண்டும்.
ஒரு வாரம் எங்களைப் பார்வையிடுவதற்கு இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ஏழு லட்சம் செலவிட நேரிட்டுள்ளது.உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இலங்கையில் முட்டாள்தனமான, கேவலமான கொள்கைகள் அமுல்படுத்தப்படுகின்றன.
இலங்கையில் கொள்கை அமுலாக்கத்திற்கு எவ்வித மதிப்பும் கிடையாது.இந்த நாடு நாளுக்கு நாள் பின்னோக்கி நகர்கின்றது, அதற்கு மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரமே காணப்படுகின்றது.
நான் இவற்றை கடுமையான தொனியில் கூறுகின்றேன், இலங்கையின் பொருளாதாரக் கொள்கையானது மிகவும் ஊழல் மோசடி மிக்க துர்நாற்றம் வீசக்கூடிய ஒன்றாகும்.
இலங்கைக்குச் சொந்தமான மண் உண்டு, பாரிய கடல் உண்டு இவற்றின் உரிமையைக் குத்தகைக்கோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது.என கலாநிதி ஏ.ரீ. ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.