அஜித் நிவாட் கப்ரால் 180 கோடி ரூபா நட்டஈடு செலுத்தினாரா!
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் 180 கோடி ரூபா நட்டஈட்டுத் தொகையை நீதிமன்றில் செலுத்தியதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
எனினும் தாம் அவ்வாறான எந்வொரு நட்டஈட்டுத் தொகையையும் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தனது முகநூல் கணக்கில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
கிரேக்க பிணை முறி முதலீட்டினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்ய அஜித் நிவாட் கப்ரால் நட்டஈடு செலுத்தியதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் முற்றுமுழுதாக பொய்த் தகவல் எனவும் அவ்வாறு எந்தவொரு தொகையையும் தாம் செலுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வாறான நட்டஈடு செலுத்த வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என தமது சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு தெளிவாக விளக்கியுள்ளதாகவும் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கிரேக்க பிணை முறி முதலீட்டில் அரசாங்கத்திற்கு பெருந்தொகை நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கிலிருந்து தம்மை குற்றமற்றவர் என தீர்மானித்து நீதிமன்றம் விடுதலை செய்தது என கப்ரால் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
எனினும் நிபந்தனை அடிப்படையிலேயே வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.