பாழடைந்து காணப்பட்ட நிலாவரை கிணறு! முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துய்மிப்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
காலாகாலமாக பிரதேச சபையினால் நிலாவரை ஆழமற்ற கிணறு உள்ளிட்ட பகுதிகள் சபையின் சொத்தாக பராமரிக்கப்பட்டன.
பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எல்லை மதில்கள் அமைக்கப்பட்டு ஆழமற்ற கிணற்றினைச் சுற்றி பாதுகாப்பு, உலோக வேலிகள், பிரதேசத்தினை அழகுபடுத்தும் மின்குமிழ்கள், பார்வையாளர் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு திறன்பட வலயம் முகாமை செய்யப்பட்டு வந்தன.
தமிழ் மக்களின் வரலாறு
இதன் மூலம் தமிழ் மக்களின் வரலாறும் தொன்மையும் எடுத்தியம்பப்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று தடவைகள் பூசகமான முறையில் இராணுவத்தினருடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் அத்திவாரம் வெட்டியது.
அந்த முயற்சி பௌத்த சிங்கள பேரினவாத நோக்கில் விகாரை அமைக்கும் முயற்சியென குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், அப்போதும் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஷ் அவற்றை தடுத்திருந்தார்.

இதனையடுத்து அவர் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு இடையூறு விளைவித்தாகத் குற்றச்சாட்டில் தவிசாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழக்கினை எதிர்கொண்டதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்குகள் பின்னர் சட்டா அதிபரின் ஆலோசனையில் உள்ளன. பிரதேசத்தில் உள்நுழைபவர்களுக்கான கட்டண அறவீடு தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தினால் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தன.
துய்மிப்புப் பணிகள்
இவ்வாறான காரணங்களினால் சபை பதவியிழந்த பின்பு பிரதேச சபையினால் குறித்த பகுதியில் செயற்பட முடியவில்லை. அதனால் அந்தப் பிரதேசம் கழிவுகளாலும், பற்றைகளினாலும் மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுக் காணப்பட்டது.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் காட்டமான கண்டனங்கள் அண்மைய நாட்களாக வெளியிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , சபை உறுப்பினரும் குழுத்தலைவருமான அ.கமலறேகன், பணியாளர்கள், பிரதேச மக்கள் இணைந்து குறித்த பகுதியை நேற்று(7.1.2026) துப்புரவு செய்துள்ளது.
சபையின் சொத்தாக உடைவடைந்த நிலையில் உள்ள இருக்கைகள், நுழைவாயில் கதவு போன்றன திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
பெயர்ப் பலகையிடப்பட்டுள்ளதுடன் பொலித்தீன் தடை மற்றும் சுத்தத்தினைப் பேணுவதற்கான விளம்பர பலகைகளும் பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ளன.


