இன்று இலங்கையில் அபிஷேகிக்கப்பட்ட புனித அன்னை வேளாங்கன்னி தேவாலயம்!!
'புனித அன்னை வேளாங்கன்னி மாதா' - கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி பல்வேறு மக்களாலும் அன்புடனும், பத்தியுடனும் வழிபடப்பட்டு வருகின்ற தாய்.
தமிழ்நாடு நாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள 'அன்னை வேளாங்கன்னி' தேவாலயத்திற்கு வருடம்தோரும் 20 மில்லியன் யாத்திரீகர்கள் இந்தியாவில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வருகை புரிகின்றார்கள்.
நாகப்பட்டனத்தில் அமைந்துள்ளது போன்றதான அன்னை வேளாங்கன்னி தேவாலயம் ஒன்று தற்பொழுது இலங்கையின் கற்பிட்டியிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் மறைமாவட்டத்தின், கற்பிட்டி பங்கின் உச்சிமுனைத் தீவில் 2011ம் ஆண்டு ஆரம்பமான ஆலய நிர்மாணப்பணிகள் உள்நாட்டு மற்றும் புலம்பெயர்ந்த பக்தர்களின் உதவிகளினால் தற்பொழுது நிறைவடைந்து, இன்று காலை 10.30 இற்கு ஆலய அபிஷேக நிகழ்வும் திருப்பலியும் இடம்பெற்றது.
சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகையின் தலைமையில், ஓய்வுபெற்ற கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணான்டோ ஆண்டகையின் பங்களிப்பிலும், இந்தியா வேளாங்கன்னி தூய ஆரோக்கிய அன்னை திருத்தல இயக்குனர் தலைமையிலும் ஆலய அபிஷேக நிகழ்வும் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தேவாலயம் அமைந்துள்ள உச்சிமுனைத் தீவு என்பது சுமார் 250 தமிழ் குடும்பங்கள் வாழ்கின்ற ஒரு தீவு.
தமிழ் நாட்டின் நாகைப்பட்டனம் போன்ற ஒரு திருத்தலமாக இந்த ஆலயமும் ஆயிரக்கணக்கான, இலட்சக் கணக்கான பக்தர்கள் வரக்கூடிய ஒரு இடமாக மாறும் என்று தாம் நம்புவதாகக் கூறுகின்றார்கள் அந்தப் பிரதேச வாழ் மக்கள்.