வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடன்களை நிர்வகிக்க புதிய நிறுவனம்
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடன்களை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனமொன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடன் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐம்பது பெரிய அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக விரைவில் ஒரு புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், புதிய பொருளாதார மாற்ற சட்டத்தின் மூலம், கடன் மறுசீரமைப்பு செயல்முறையை வெற்றிகரமாக செய்ய முடியும்.
அத்துடன் பொருளாதார மாற்ற சட்டத்தின் கீழ் இலங்கை பொருளாதார ஆணைக்குழு மற்றும் தேசிய உற்பத்தி ஆணைக்குழு என்பன நிறுவப்படும் என்று நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளர் எம். எஸ். சமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டுச்சபையின் செயற்பாடுகள்
முதலீட்டுச்சபையின் செயற்பாடுகள் இலங்கை பொருளாதார ஆணைக்குழு ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் முதலீட்டு வலயங்களை நிர்வகிப்பதற்கு தனியான நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய நாடாக இலங்கை மாற்றப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் அதன் கடனை மறுசீரமைக்க முடியாது.
சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் தொடர்ந்து கடன் பெற்று வரும் அரசாங்கம், மற்ற கடன் வழங்குநர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
எனவே புதிய பொருளாதார மாற்ற சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |