அமெரிக்கா சென்ற கடற்படை மாலுமிகள் கப்பலில் இருந்து தப்பியோட்டம்
அமெரிக்காவில் ரிம் ஆஃப் தி பசுபிக் பயிற்சியில் இணைவதற்காக அங்கு சென்ற இலங்கை கடற்படையின் ஒன்பது மாலுமிகள் அந்நாட்டில் தங்கும் நோக்கில் கப்பலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகில் மிகப் பெரிய சர்வதேச கடற்படை பயிற்சியான RIMPAC 2022 பயிற்சிக்காக கடந்த ஜூன் மாதம் இலங்கையில் இருந்து 50 பேரை கொண்ட கடற்படை மாலுமிகள் குழு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளது.
பயிற்சிகளின் பின் கடற்படை கப்பலுக்கு உதவுவதற்காக தங்க வைக்கப்பட்டிருந்தனர்
பயிற்சிகளின் பின்னர், இலங்கை கடற்படையின் புதிய கப்பலின் பணியாளர்கள் குழுவுக்கு உதவுவதற்காக இவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அமெரிக்க கடற்படையின் USCGC Douglas Munro என்ற கப்பல் அமெரிக்க கடற்படையின் பணிகளில் இருந்து நீக்கப்பட்டு, வெளிநாட்டு உதவி உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் முன்னாள் கடற்படை கப்பலான USCGC Douglas Munro, அமெரிக்காவில் சிறப்பான புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அது விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இந்த கப்பலில் பணியாற்றி வந்த நிலையில், 9 இலங்கை கடற்படை மாலுமிகள் அங்கிருந்து தப்பியதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை, அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் இது தொடர்பாக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க குடியேற்ற சட்டத்தை மீறி தங்கினால் கைது செய்யப்படுவார்கள்
அத்துடன் அமெரிக்காவில் அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களை மீறும் நபர்கள் கைது செய்யப்படலாம். அத்துடன் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு நாடு கடத்தப்படலாம்.
மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருப்பவர்கள் 10 ஆண்டுகள் வரை அமெரிக்காவுக்குத் திரும்ப வரமுடியாமல் தடுக்கப்படலாம் என தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து வெளியேறும் மக்கள்
இலங்கையில் நிலவும் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கை மக்கள் சட்ட ரீதியாவும் சட்டவிரோதமாகவும் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது.
பல வருட தவறான அரசியல் முகாமைத்துவம் காரணமாக இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாட்டு கடனைகளை திரும்ப செலுத்துவதை நிறுத்தியதுடன் நாட்டின் பொருளாதாரம் மோசமாக வீழ்ச்சியடைந்தது.
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத காரணத்தினால், மக்கள் மின் துண்டிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பணவீக்கத்தின் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் காரணமாக அன்றைய ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
போராட்டகாரர்கள் தடைகளை தகர்த்து ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர். இதனால், ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பிச் செல்ல நேரிட்டது.